ஆஸ்திரேலிய வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மாடுகள் மரணம்

கடும் வறட்சியால் பலவீனமடைந்த ஆயிரக்கணக்கான மாடுகள் வெள்ளத்தில் மடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குவீன்ஸ்லந்து மாநிலத்தில் இரண்டு வாரங்களாக பெய்த தொடர் மழையால் அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ள நீர் வடியும் இந்நேரத்தில் மாடுகளின் மரண எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.

“நூறாயிரக்கணக்கான மாடுகள் மடியக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று பிரதமர் ஸ்காட் மெர்ரிசன் தெரிவித்தார்.

“பல வருடங்களாக வறட்சியால் அவதிப்பட்ட விவசாய சமூகத்தினர், இந்த வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவதைக் காண்பது பெரும் கவலையை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

வெப்ப மண்டல காடுகளைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவில் கடும் மழை பெய்வது வழக்கம் என்றாலும் ஆக அண்மைய மழைப்பொழிவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.