தாய்லாந்து தேர்தலில் தடையை  எதிர்நோக்கும் அரசியல் கட்சி 

பேங்காக்: தாய்லாந்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசியை அறிவித்த அரசியல் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட   தடை விதிக்கப்படலாம் என்று பேங்காக் தகவல்கள் கூறின.
இளவரசி உபோல்ரத்தனா ராஜகன்யா வரும் மார்ச் 24ஆம் தேதி தேர்தலில் போட்டியிட அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்த தாய் ரக்‌ஷா சார்ட் கட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருப்பதாக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளதை அடுத்து அக்கட்சிக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டியிட அவரின் சகோதரரும் நாட்டின் மன்னருமான வஜிரலொங்கோன் தடை விதித்துள்ளார். 

இந்நிலையில் இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டி யிடலாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று பரிசீலிக்க விருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தாய்லாந்தில் 2014ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி ஏற்பட்ட பின்னர் அங்கு நடைபெறவுள்ள முதல் தேர்தல் இது. வரும் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமரும் ராணுவத் தலைவருமான பிரயுத் சான் ஓ சா போட்டியிடுகிறார்.
தாய் ரக்‌ஷா சார்ட் கட்சி கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அக்கட்சியின் நிர்வாகத் தலைவர் சாய்சாயிங் மறுத்துவிட்டார். அக்கட்சி கலைக்கப்பட்டால் வரும் தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.