அமெரிக்கா நீண்டகாலமாகக் கவனிக்கத்தவறிய மத்திய ஐரோப்பாவுக்கு பொம்பேயோ பயணம்

மத்திய ஐரோப்பாவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு வழிவிடும் வகையில் அமெரிக்கா அவ்வட்டாரத்தைக் கவனிக்கத்தவறியதைச் சரிசெய்ய விரும்பி இவ்வாரம் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ பயணம் மேற்கொள்வதாக அரசாங்க நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தப் பயணத்தின்போது நடைபெறவிருக்கும் மத்திய கிழக்கு தொடர்பான மாநாட்டில், ஈரானுக்கு எதிரான கூட்டணியை அமைக்க வாஷிங்டன் நம்பிக்கை கொண்டுள்ளது.

பொம்பேயோவின் பயணம் இன்று பிப்ரவரி 11ஆம் தேதி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் தொடங்குகிறது. ஆகக் கடைசியாக, 2011ஆம் ஆண்டில் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் இந்நகருக்கு வருகையளித்தார்.

செவ்வாய்க்கிழமை அவர் ஸ்லோவாக்கியாவின் பிராடிஸ்லாவா நகருக்குச் செல்வார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உயர் அதிகாரி இங்கு வருகை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹங்கேரியிலும் போலந்திலும் சீனாவின் வளர்ந்துவரும் இருப்புநிலை, குறிப்பாக ஹுவாவெய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் விரிவாக்கம், வாஷிங்டனுக்கு கவலையளிக்கிறது.

ஹுவாவெய் நிறுவனத்தின் சாதனங்கள் வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்புநாடுகளும் நம்புகின்றன. மத்திய ஐரோப்பாவில் ஹுவாவெய் நிறுவனம் விரிவடைவதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் கால்பதித்துவிடக்கூடும் என்றும் கருதப்படுகிறது.

ஹுவாவெய் நிறுவனத்தைத் தவிர்க்குமாறு உலக நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் எந்த அரசாங்கத்திற்காகவும் வேவு பார்க்கவில்லை என்று ஹுவாவெய் மறுத்து வருகிறது.

Loading...
Load next