சில “வாரங்களில்” சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக்கொள்ளப்படும்: அமெரிக்கத் தளபதி

அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் உத்தரவின்படி, சிரியாவிலிருந்து அமெரிக்கத் தரைப்படை துருப்புகளை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை இன்னும் சில வாரங்களில் தொடங்கக்கூடும் என மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கத் துருப்புகளின் படைத் தளபதி ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

ஆயினும், படை மீட்பு நடவடிக்கை சிரியாவின் நிலவரத்தைப் பொறுத்தே தொடங்கப்படும் என அமெரிக்க ராணுவத் தளபதி ஜோசப் வொட்டல் எச்சரித்தார். சிரியாவில் இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக ஈராக்கிய எல்லைக்கு அருகில் இறுதி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிரியாவிலிருந்து கருவிகளையும் சாதனங்களையும் அமெரிக்க ராணுவம் வெளியேற்றத் தொடங்கிவிட்டது.

சிரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக்கொள்ளப்படும் என டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ் பதவி விலகியதால், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அவசர அவசரமாகப் படை மீட்புத் திட்டத்தை வகுக்க நேர்ந்தது.

படை மீட்பு நடவடிக்கைக்குத் துணை புரிய நூற்றுக்கணக்கான துருப்புகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.