போலி பட்டக்கல்விச் சான்றிதழ் வைத்துள்ளதாக ஐந்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

நேர்மையான அரசாங்கம் என்று பெருமைகொள்ளும் மலேசியாவின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மலேசிய துணை அமைச்சரின் கல்வித் தகுதி பற்றிய கேள்விகள் எழுந்ததை அடுத்து தொடர்ச்சியாக இந்தக் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

தொலைவு கற்றல் திட்டத்தின் மூலம் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தாம் பட்டக்கல்விப் பெற்றதாக வெளியுறவுத் துணை அமைச்சர் மர்சுகி யஹ்யா கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அரசியல் ஆர்வலர் ஒருவர் போலிசிடம் புகார் அளித்ததையடுத்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் அனைத்துலக பல்கலைக்கழகம் எனும் பட்டக்கல்விச் சான்றிதழ் வழங்கும் அமைப்பிலிருந்து தமக்குப் பட்டக்கல்விச் சான்றிதழ் கிடைத்ததாக மர்சுகி ஒப்புக்கொண்டார்.

அந்தச் சம்பவம் அம்பலப்படுத்தப்பட்டதிலிருந்து தற்காப்பு அமைச்சர் முகமது சாபு, வீடமைப்பு உள்துறை அமைச்சர் சுரைடா கமருதீன், ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சாபியான், பேராக் நிர்வாக கவுன்சிலர் பால் யோங் சூ கியோங் ஆகியோரின் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆளும் கூட்டணி தம்மை நம்பகத்தன்மையான நேர்மையான அரசாங்கமாகக் கூறிவரும் தருணத்தில் இந்த மோசடி குற்றச்சாட்டுகள் அவமானம் ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.