நஜிப்: எனது பட்டக்கல்விச் சான்றிதழ் போலி அல்ல

பிரிட்டனின் நொட்டிங்ஹம் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற தனது பட்டக்கல்விச் சான்றிதழ் போலி அல்ல என்று மலேசியாவின் முன்னையப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்திருக்கிறார். மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் திரு நஜிப், தனது கல்வித்தகுதி பற்றி கேட்கப்பட்டபோது “என் சான்றிதழ் நாணயமானது,” என்று பதிலளித்தார்.

1970களில் திரு நஜிப், நொட்டிங்ஹம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் சோங் செமின் தெரிவித்தார். மலேசிய அமைச்சர்கள் சிலரின் கல்வித்தகுதியைப் பற்றிய போலியான செய்திகள் எங்கிருந்து உதிக்கின்றன என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் தேயோவிடம் திரு நஜிப் தனது ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆக அண்மையில், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதிகளைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. வெளியுறவு துணை அமைச்சர் மர்சுக்கி யாஹ்யா, ஜோகூர் முதலமைச்சர் ஒஸ்மான் சபியான், பேராக் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் இயோங் சூ கியோங் ஆகியோர் இவர்களில் அடங்குவர்.