சீனாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நியூசிலாந்து விமானம்

சீனாவின் ஷாங்ஹாய் நகரத்திற்குச் சென்றுகொண்டிருந்த ‘ஏர் நியூசிலாந்து’ விமானத்தைத் தரையிறங்கவிடாமல் சீனா தடுத்ததை அடுத்து அந்த விமானம் வேறு வழியின்றி நியூசிலாந்திற்குத் திரும்பியது. சீன விமானத்துறை அதிகாரிகளுக்கு நியூசிலாந்தின் குடிமை விமானத்துறை ஆணையம் அனுப்பிய ஆவணங்களில் தைவானின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது இதற்குக் காரணம் என்று நியூசிலாந்து செய்தித்தளம் ‘ஸ்டஃப் நியூஸ்’ தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானைத் தனி நாடாக அங்கீகரிக்கும் குறிப்புகள் விமானப் பத்திரங்களிலிருந்து அகற்றப்படவேண்டும் என்று சீன அரசாங்கம், ‘ஏர் நியூசிலாந்து’ நிறுவனத்தை எச்சரித்திருந்தது. ஆனால் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று ‘ஸ்டஃப் நியூஸ்’ கூறியது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் இதற்கு உடன்பட்டன.

தைவானைச் சீனா இன்னும் தனது சொந்த மாநிலமாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் அந்தத் தீவு தனது ராணுவ வலிமையால் கைப்பற்றப்படும் என்றும் சீனா கூறியிருந்தது.