செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அமெரிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத்திற்கு மத்திய அரசாங்கத்தின் வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று திரு டிரம்ப்பின் அதிபர் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செயற்கை நுண்ணறிவின் ஆரம்பக்கட்ட மேம்பாட்டாளராகவும் இத்துறையில் அனைத்துலகத் தலைவராகவும் திகழும் அமெரிக்கா, இத்துறையால் பயனடைந்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் அமெரிக்காவைச் சீனா மிஞ்சலாம் என்ற கவலைகள் எழுந்துள்ள வேளையில் திரு டிரம்ப்பின் இந்த உத்தரவு வெளிவந்தது. ஆய்வாளர்களுக்கு வளங்களை அதிகரிப்பது, விதிமுறைகளை அமைப்பது, கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவை வளர்ப்பது, போட்டித்தன்மையை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான முயற்சிகள் திட்டமிடப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உரிய நேரத்தில் இந்த  உத்தரவு  அறிவிக்கப்பட்டாலும் இதற்கான போதிய நிதி பெறப்படுமா என்று புரூக்கிங்ஸ் ஆய்வுக் கழகத்தின் தொழில்நுட்பப் புத்தாக்க மையத்தின் தலைவர் திரு டேரல் வெஸ்ட் கேள்வி எழுப்பினார்.

“அதிபர் டிரம்ப் தொடங்கி வைக்கும் சில திட்டங்கள் கேட்பதற்கு நல்லதாக இருந்தாலும் அவற்றால் ஏற்படும் தாக்கங்கள் குறைவு,” என்று திரு வெஸ்ட் கூறினார்.  “2030ஆம் ஆண்டுக்குள் சீனா, செயற்கை நுண்ணறிவு துறையில் 150 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்யவுள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமெரிக்கா திட்டங்களை மேற்கொள்வது முக்கியம்,” என அவர் சொன்னார்.