அமெரிக்க அரசு முடக்கத்தை தவிர்க்க இணக்கம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு நிதி தொடர்பில் இரண்டாவது முறையாக அரசு முடக்கத்தைத் தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செனட் சபை உறுப்பினர்கள் கொள்கை அடிப்படையில் இணக்கம் கண்டுள்ளனர்.
ஆனால் இந்த இணக்கத்தில் மெக்சிகோவுடனான எல்லைப் பகுதியில் சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்கும் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் இடம்பெறவில்லை என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூறுகின்றனர்.
எனவே, இந்த இணக்கத்தை அதிபர் டிரம்ப் ஏற்பாரா என்ற ஐயம் நிலவுகிறது.
மெக்சிகோவுடனான எல்லை யில் சுவர் எழுப்ப அவர் கேட்ட நிதியைத் தர ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.
இதன் விளைவாக 35 நாட்களுக்கு அமெரிக்க அரசு முடங்கியது.
அதிபர் டிரம்ப் கேட்ட தொகை அவருக்குக் கிடைக்காமலேயே அரசு முடக்கம் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.
புதிய இணக்கத்தின்படி அதிபர் டிரம்ப் கேட்டிருந்த நிதி வழங்கப்படுமா என்பது குறித்து குடியரசுக் கட்சி செனட்டர் ரிச்சர்ட் ஷெல்பி தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் அமெரிக்காவின் தெற்கு எல்லையில் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் புதிய வேலியைக் கட்ட இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற செயலக ஊழியர் தெரிவித்தார்.
இந்தத் தொகையைத்தான் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க நாடாளுமன்றம் வழங்கி வருகிறது.  அதிபர் டிரம்ப் கேட்டிருக்கும் தொகையைவிட இது குறைவு.
எல்லையில் சுவர் எழுப்ப இந்தத் தொகை பயன்படுத்தப் படாது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.