பிலிப்பீன்சின் பெயரை மாற்ற விரும்பும் டுட்டர்ட்டே

மணிலா: பிலிப்பீன்சின் பெயரை மாற்ற அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே விருப்பம் தெரிவித்துள்ளார்.
காலனித்துவ சாயத்தை நீக்க நாட்டின் பெயரை மஹார்லிக்கா என்று மாற்ற அவர் விரும்புகிறார்.
மஹார்லிக்கா என்றால் மகத்துவம் என்று பொருள். பிலிப்பீன்சின் முன்னாள் சர்வாதிகாரியான அமரர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் இதையே விரும்பினார்.
பிலிப்பீன்சை 300 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஸ்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்நாட்டுக்கு ஸ்பெயினின் மன்னரான இரண்டாவது ஃபிலிப்பின் பெயர் வைக்கப்பட்டது.
“நாட்டின் பெயரை என்றாவது ஒருநாள் மாற்றுவோம். மார்கோஸ் நினைத்தது சரியே. மஹார்லிக்கா மலாய் சொல்லாகும். அதனால் அதையே நாட்டின் பெயராக சூட்ட அவர் விரும்பினார்,” என்றார் அதிபர் டுட்டர்ட்டே.
இந்நிலையில், நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமாயின் அரசியல் சாசனத்தைத் திருத்தி எழுத வேண்டிவரும் என்று பிலிப்பீன்ஸ் செனட் தலைவர் டிட்டோ சோட்டோ அக்கறை தெரிவித்துள்ளார்.