மகாதீர் ‘துரோகம்’ செய்துவிட்டார்; பழி சுமத்திய பிகேஆர் துணைத் தலைவர்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி, பிரதமர் மகாதீர் ‘துரோகம்’ செய்துள்ளதாகப் பழி சுமத்தியுள்ளார்.

எதிர்கட்சியான அம்னோவிலிருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கூட்டணியில் இணைத்துக்கொண்டதால் அவர் அவ்வாறு சாடியுள்ளார்.  

அம்னோ கட்சியிலிருந்து ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு வரும் உறுப்பினர்களை ஏற்கமாட்டேன் என்று முன்பு டாக்டர் மகாதீர் கூறியிருந்தார் என்றும் அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றவில்லை என்றும் ‘பிகேஆர்’ கட்சியின் துணைத் தலைவர் சாங் கி காங் கூறியுள்ளார்.

அடுத்த பிரதமராகப் பதவி ஏற்கக் காத்திருக்கும் அன்வார் இப்ராஹிமின் கட்சியைச் சேர்ந்த சாங், முன்னாள் அமைச்சர் ஹம்சா ஸைனுதீன் உட்பட ஏழு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களை மகாதீர் தமது கட்சியில் இணைத்துக்கொண்டது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

எழுவரும் முன்னாள் பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்தில் முக்கிய இடம்பிடித்தவர்கள் என்று கூறியுள்ள சாங், தற்போதைய ஆளும் கூட்டணியில் இணைய விரும்பும் தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களை மறுக்குமாறு பக்கத்தான் தலைமைத்துவத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.