ஈரானுக்காக உளவு பார்த்ததாக முன்னாள் அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க ஆகாயப்படையின் முன்னைய அதிகாரி ஒருவர் ஈரானுக்காகச் சொந்த நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவருக்கான தேடல் தற்போது உலகம் முழுதும் நடைபெற்று வருகிறது.

மோனிக்கா விட் என்ற அந்த அதிகாரி 2013ஆம் ஆண்டில் ஈரானின் பக்கம் கட்சி மாறியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் தன்னுடன் வேலை செய்த புலனாய்வுத் துறை அதிகாரிகளையே அவர் குறிவைத்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் அரசாங்க ரகசியங்கள், ஈரான் தொடர்பில் அமெரிக்கா வைத்திருந்த திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை மோனிக்கா ஈரானிடம் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார்.

மோனிக்காவின் வேலை சகாக்களின் கணினிகளில் வேவு மென்பொருட்களைப் பொருத்த முயன்றதன் பேரில் நான்கு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

1997ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மோனிக்கா அமெரிக்க ஆகாயப்படையில் பணியாற்றினார். அவருக்கு ஆக உயரிய பாதுகாப்பு அனுமதி (security clearance) கொடுக்கப்பட்டிருந்தது. ஈரானில் மோனிக்கா இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும் அங்கு அவர் அமெரிக்காவுக்கு எதிரான உரைகளை ஆற்றியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

மோனிக்கா ஆகக் கடைசியாக ஆசியாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்பட்டதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சொந்த நாட்டுக்கு எதிராக குடிமக்களில் ஒருவர் துரோகம் செய்வது அமெரிக்காவுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அந்நாட்டின் துணைத் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார். 

Loading...
Load next