நஜிப்பின் மேல்முறையீட்டு மனுக்கள்  மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் 

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செய்திருந்த நான்கு மேல்முறையீட்டு மனுக்கள் குறித்த விசாரணை மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வரும் என்று மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் நம்பிக்கை மோசடி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உட்பட நஜிப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நஜிப் மறுத்துள்ளார். நஜிப் மீதான வழக்கு பிப்ரவரி 12ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணை தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று நஜிப்பின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் நஜிப்பின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வரும் தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.