மலேசியாவில் மின்தூக்கிக்குள் மாதை தாக்கி கொள்ளை: இணையத்தில் பரபரப்பு காணொளி

மலேசியாவின் தலைநகர் கோலா லம்பூரில் செராஸ் பகுதியில் உள்ள எம்ஆர்டி நிலையம் ஒன்றின் மின்தூக்கிக்குள் ஒரு மாதைக் கடுமையாகத் தாக்கி ஆடவர் ஒருவர் கொள்ளையடித்ததை அங் கிருந்த படச்சாதனம் அப்படியே படம் பிடித்துவிட்டது. ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட அந்தக் காணொளி யைப் பார்த்து ஏராளமானவர்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள். மின்தூக்கிக்குள் இருந்த ஒரு மாதிடமிருந்து அவருடைய கைப் பையைப் பறிக்க முயன்ற கொள் ளையன், அந்த 48 வயது மாதைக் கண்டபடி தாக்கியதைக் காணொளி காட்டியது. கடைசியாக மாதின் பையைப் பறித்து அதன் உள்ளே இருந்த பணப் பையை எடுத்துக்கொண்டு பையை வீசி எறிந்துவிட்டு கொள் ளையன் தப்பிச் சென்றுவிட்டான். இதனிடையே, தாக்கப்பட்ட மாதுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுவிட்டதாகவும் அவருக்குப் பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கோலா லம்பூர் நகர உளவு போலிஸ் தலைவர் ருஷ்டி முகம்மது இஷா கூறினார். “அந்த மாதின் அடையாள அட்டை, ஏடிஎம் அட்டைகள், 400 ரிங்கிட் பணம் ஆகியவை இருந்த பையுடன் சந்தேகப்பேர்வழி தப்பி விட்டான். அந்தச் சந்தேகநபரைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “மூன்று சாட்சியங்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.