பாத்தாம் தீவில் இரண்டு சிறப்புப் பொருளியல் வட்டாரங்கள் அமையலாம்

இந்தோனீசியாவின் பாத்தாம் தீவில் இரண்டு சிறப்புப் பொருளியல் வட்டாரங்களை (special economic zone) அமைப்பதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகங்களுக்குக் கூடுதலான வரிச்சலுகைகளும் ஊழியர்களுக்கான தனிநபர் வருமான வரிச்சலுகைகளும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வரும் ஜூன் மாதத்திற்குள் ஒப்புதல் கிடைக்கலாம் என்று பாத்தாமைச் சேர்ந்த மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.  சிங்கப்பூருக்கும் பாத்தாமுக்கும் இடையே கப்பல் வழியாகப் பயணம் செய்வதற்குக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகும்.

கப்பல் பட்டறைகள், மின்னணுவியல் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்குத் தடையற்ற வர்த்தக வட்டாரமாக பாத்தாம் திகழ்கிறது. ஆயினும், பாத்தாமின் பொருளியல் வளர்ச்சி அண்மை ஆண்டுகளாகத் தேங்கிய நிலையிலேயே உள்ளது. இதனைச் சரிசெய்ய, தடையற்ற வர்த்தகத்தை மேற்பார்வையிடும் பாத்தாம் மாநில அமைப்பான ‘பிபி பாத்தாம்’, அந்தத் தீவின் இரண்டு வட்டாரங்களைச் சிறப்புப் பொருளியல் வட்டாரங்களாக அறிவிக்க இந்தோனீசிய மத்திய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளது.

‘ஹங் நடிம்’ அனைத்துலக விமான நிலையத்திலும் தீவின் வடகிழக்கு நொங்சா வட்டாரத்திலும் அந்த இரண்டு வட்டாரங்கள் அமையவிருக்கின்றன. அவை முறையே தளவாடம், சுற்றுப்பயணம் ஆகிய துறைகளுக்கு ஒதுக்கப்படும். நொங்சா வட்டாரத்தில் கடற்கரை விடுதிகளும் சிங்கப்பூரில் தளம் கொண்டிருக்கும் ‘இன்பைனைட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் அமைத்துள்ள தொழில்நுட்பப் பூங்காவும் உள்ளன.

இத்திட்டத்தை ஆராய பல்வேறு அமைச்சுகளுக்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும் என்று ‘பிபி பாத்தாமின் தலைவர் எடி புத்ரா இரவாடி ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நிறுவனத்திடம் தெரிவித்தார். வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் இந்தோனீசியப் பொதுத் தேர்தலில் திரு ஜோக்கோ விடோடோ மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஜூன் மாதத்திற்குள் இந்தத் திட்டத்திற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகத் திரு இரவாடி சொன்னார்.

இதுவரை இந்தோனீசியாவில் பன்னிரண்டு சிறப்புப் பொருளியல் வட்டாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 ‘சிங்கப்பூர் பங்காளி, போட்டியாளர் அல்ல’

பாத்தாம் கப்பல் துறையில் சிங்கப்பூருக்குப் போட்டியாகத் திகழ முனைவதாக புளும்பர்க் செய்தி நிறுவனம் அண்மை அறிக்கை ஒன்றில் கூறியதைத் திரு இரவாடி மறுத்துள்ளார். “சிங்கப்பூர் ஒரு நாடு. நாங்கள் ஒரு நகரம். சிங்கப்பூர் பெற்றோர் என்றால் நாங்கள் பிள்ளை. நாங்கள் இருவரும் பங்காளிகளே, போட்டியாளர்கள் அல்ல,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

பாத்தாமின் 46.9 விழுக்காடு ஏற்றுமதிகளுக்கும் 30.46 விழுக்காடு இறக்குமதிகளுக்கும் சிங்கப்பூர் பங்களிப்பதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.