‘திட்டமிட்ட பயங்கரவாதம்’: பாகிஸ்தானைக் கைக்காட்டும் ஈரான்

ஈரானில் அண்மையில் கிட்டத்தட்ட 27 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பதில் கொடுத்தாகவேண்டும் என்று ஈரானின் நாடாளுமன்றப் பேச்சாளர் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஈரானின் இஷாஃபஹன் நகரில் பிப்ரவரி 16ஆம் தேதி நிகழ்ந்த அந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ் அல்-அதில் (Jaish al-Adl) கிளர்ச்சி அமைப்பு பாகிஸ்தானிலிருந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் பொருட்டு ஈரானிய வெளியுறவு அமைச்சு பாகிஸ்தானின் தூதருக்கு அழைப்பாணை விடுத்தது.

தாக்குதலுக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளும் சந்தேகிக்கப்படுவதாக ஈரான் முன்னர் கூறியிருந்தது. 

இதற்கிடையே பாகிஸ்தானில் தளம் கொண்டுள்ள ஜெயிஷ்-இ-முகம்மது பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 23 பேரை இந்தியா கைது செய்துள்ளது. காஷ்மீரில் 44 பேர் உயிரிழந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.