பூசலால் நிலைகுலைந்த ரக்கைனில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சி

மியன்மாரில் ரோஹிங்யா இன மக்கள் வாழும் இடமான ரக்கைன் மாநிலத்தில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான கண்காட்சி ஒன்று வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ரக்கைன் தற்போது மியன்மாரில் இரண்டாவது ஆக ஏழ்மையான மாநிலமாக உள்ளது.

“உண்மையிலேயே ரக்கைனில் பூசல் நடைபெறும் பகுதி மிகச் சிறிது. ரக்கைனின் மற்ற பகுதிகள் அமைதியாக உள்ளன. இதனை நீங்கள் நேரடியாகக் காணவேண்டும்,” என்று மியன்மார் இளைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஹடுன் தெரிவித்திருக்கிறார்.

ரக்கைன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அண்மை நிகழ்வுகளால் அங்குச் செல்லும் சுற்றுப்பயணிகள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2017ல் அங்கு நடந்த பூசலைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 700,000க்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து வெளியேறி பங்ளாதேஷ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.