ஹுவாவெய்: அமெரிக்கா எங்களை ஒடுக்கவே முடியாது

ஹுவாவெய் நிறுவனத்தை “அமெரிக்கா ஒடுக்கவே முடியாது,” என்று அதன் இணை நிறுவனர் ரென் சங்ஃபெய் தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் அதிக முற்போக்குடன் இருப்பதால் உலகம் எங்களை விட்டுவிட முடியாது. எங்களது பொருட்களைச் சில நாடுகள் பயன்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டாலும், தயாரிப்புகளை அதற்கேற்றவாறு குறைக்க நாங்கள் தயார்,” என்று அவர் பிபிசி நிறுவனத்திடம் கூறினார்.

தனது மகளும் ஹுவாவெய்யின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்சோ கைது செய்யப்பட்டதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ரென் கூறினார். “அமெரிக்கா செய்திருப்பதை நான் எதிர்க்கிறேன். அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ள இந்தச் செயல் ஏற்கத்தக்கதல்ல,” என்று ரென் பிபிசியிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா டிசம்பர் 1ஆம் தேதி மெங்கை கைது செய்தது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக தடைகளை மீற மெங் வங்கிகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அத்துடன், சீன அரசாங்கத்தின் சார்பாகச் செயல்பட்டு அமெரிக்க நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதாக ஹுவாவெய் நிறுவனமும் ‘ஸிடிஇ கார்ப்’ என்ற மற்றொரு சீன நிறுவனமும் குற்றம் சாட்டப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டை அந்த இரண்டு நிறுவனங்களும் மறுத்துள்ளன.

“இத்தகைய உளவு நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடவே மாட்டோம்,” என்று திரு ரென் கூறினார். தொலைத்தொடர்புக் கருவிகளைத் தயாரிக்கும் உலகின் ஆகப் பெரிய நிறுவனமான ஹுவாவெய், சீன அரசாங்கத்துடனான தனது தொடர்பு குறித்து குறைகூறல்களை எதிர்நோக்குகிறது. ஹுவாவெய்யின் தொழில்நுட்பத்தை இனி பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டது. 

“மேற்கில் வெளிச்சம் தணிந்தாலும் கிழக்கில் பிரகாசம் தொடர்ந்து வீசும். வடக்கு இருட்டினால் என்ன, தெற்கு இன்னமும் உள்ளது. அமெரிக்காவே உலகம் அல்ல; உலகின் ஒரு பகுதி மட்டுமே,” என்றார் திரு ரென்.