மலேசியாவின் பெருவிரைவு ரயில் நிலையத்தில் பெண்ணைத் தாக்கிய நபர் கைது

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பெருவிரைவு ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவரைத் தாக்கிய ஆடவரை அந்நாட்டு போலிசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூரின் செராஸ் மாநிலத்திலுள்ள தாமான் முட்டியாரா ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

ரயில் நிலையத்தின் மின்தூக்கிக்குள் அந்த 48 வயது பெண் நுழைந்தபோது சந்தேக நபர் அவரைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றதாகக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளி காட்டுகிறது. அந்த 28 வயது ஆடவர் திடீரென அந்தப் பெண்ணைப் பலமுறை குத்தியதையும் உதைத்ததையும் அந்தக் காணொளி காட்டியது.அந்தப் பெண்ணிடம் இருந்த 400 ரிங்கிட் ரொக்கத்தையும் வங்கி அட்டைகளையும் எடுத்துக்கொண்டு சம்பவ இடத்தைவிட்டு ஆடவர் ஓடியதாகப் பின்னர் தெரிய வந்தது. 

சந்தேக நபர் நேற்றிரவு 8.10 மணிக்கு தாமான் செராசிலுள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக நகர போலிஸ் தலைவர் மஸ்லான் லசிம் கூறியதாக ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்தது.