டிரம்ப்புக்கு எதிராகப் பதினாறு மாநிலங்கள் வழக்கு

எல்லைச் சுவர் எழுப்புவதற்காக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தும் திட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிராக நியூயார்க், கலிஃபோர்னியா உள்ளிட்ட 16 மாநிலங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றம் அந்நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் தனக்கு ஒதுக்கிய நிதியைவிட பல பில்லியன் டாலர் அதிகமான தொகையைச் செலவு செய்யப்போவதாகத் திரு டிரம்ப் சூளுரைத்ததை அடுத்து அரசமைப்புச் சட்ட ரீதியான இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

செலவுத் தொகையின் மீது நாடாளுமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகள், அமெரிக்க அதிபரால் பயன்படுத்தக்கூடிய அவசரகால அதிகாரங்கள், பிரச்சனையைத் தீர்க்க நீதிமன்றம் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் உள்ளிட்ட கேள்விகள் இந்த விவகாரத்தால் எழுந்துள்ளன. 

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றம், திரு டிரம்ப்பின் பிரகடனத்தை எதிர்க்க வேறொரு வழியைக் கையாள்கிறது. திரு டிரம்ப்பிற்கு எதிராக வழக்கைத் தொடுப்பதுடன் அவசரகாலப் பிரகடனத்தை நீக்குவதற்கான வாக்கெடுப்பை அமெரிக்க நாடாளுமன்றம் நடத்தலாம்.

எல்லைச் சுவர்களை எழுப்புவதற்காகத் திரு டிரம்ப்புக்கு 1.375 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மத்தித்தனர். ஆயினும் இந்த நிதி போதவில்லை என்று கூறிய திரு டிரம்ப், அரசாங்கத்தின் மேலும் இரண்டு துறைகளிலிருந்து நிதியை நாடுகிறார். பொருளியல் துறையிலிருந்து 600 மில்லியன் டாலரையும் ராணுவத் துறையிலிருந்து 6.1 பில்லியன் டாலரையும் எடுத்து எல்லைச் சுவர் திட்டத்திற்குப் பயன்படுத்த திரு டிரம்ப் திட்டமிடுகிறார்.

மெக்சிகோவிலிருந்து கள்ளக் குடியேறிகள் பலர் அமெரிக்காவுக்குள் பெருமளவில் நுழைவதால் தமது நாட்டில் குற்றச்செயல்களும் போதைப்புழக்கமும் அதிகரித்து வருவதாகத் திரு டிரம்ப் கூறினார்.

 

Loading...
Load next