பாஸ்: நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் மகாதீரை நாங்கள் ஆதரிப்போம்

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தனது சொந்தக் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானால் துரோகம் செய்யப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்கப்போவதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டணியைச் சேர்ந்த இரண்டு கட்சிகள் டாக்டர் மகாதீருக்குத் துரோகம் செய்யக்கூடும் என்று அடிப்படைவாத சமயக் கொள்கைகளைக் கொண்ட பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் தெரிவித்தார். ஆனால் அந்தக் கட்சிகளை அவர் குறிப்பிடவில்லை. 

இந்த விவகாரம் குறித்து பாஸ் கட்சித் தலைவர்கள் டாக்டர் மகாதீரைக் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியதாகத் திரு ஹசான் கூறினார். “பிரதமருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை பாஸ் ஆதரிக்கும் என்று நாங்கள் எழுத்துபூர்வமாக அவரிடம் உறுதி தெரிவித்தோம்,” என்று அவர் சொன்னார்.

“தமக்கு எதிரான துரோகச்செயல் ஒன்று நடக்கும் என்று டாக்டர் மகாதீர் கோடிகாட்டியுள்ளார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கான வாக்களிப்பு தொடங்கலாம்,” என்றார் அவர்.