ஐஎஸ் அமைப்பில் இருந்த பிரிட்டிஷ் இளம்பெண் குடியுரிமையை இழக்கிறார்

ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரைத் திருமணம் செய்ய சிரியாவுக்குச் சென்ற 19 வயது பிரிட்டிஷ் பெண்ணின் குடியுரிமை ரத்தாகிறது. ஷமிமா பேகம் என்ற அந்தப் பெண்ணின் குடும்பத்தாரிடம் பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனின் உள்துறை அமைச்சின் இந்த முடிவு தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக ஷமிமாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த முடிவை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

கிழக்கு லண்டனின் 'பெத்னல் கிரீன்' என்ற ஊரைச் சேர்ந்த ஷமிமா, 2015ஆம் ஆண்டில் இரண்டு பள்ளித் தோழிகளுடன் சிரியாவுக்குச் சென்றார். அப்போது ஷமிமாவுக்கு 15 வயது.  அந்த மூன்று பெண்களும் 'கேட்விக்' விமான நிலையத்திலிருந்து துருக்கிக்குச் சென்று, அங்கிருந்து ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த சிரியாவின் நிலப்பகுதிக்குச் சென்றனர்.

அண்மையில் சிரியாவிலுள்ள அகதி முகாம் ஒன்றில் ஷமிமா, பிரிட்டனைச் சேர்ந்த நிருபர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார்.