டிரம்ப்: வடகொரியாவை அவசரப்படுத்த விரும்பவில்லை

வடகொரியா தனது அணுவாயுத மேம்பாட்டுத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என தாம் விரும்பினாலும் அந்நாட்டை அவசரப்படுத்த விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் திரு டிரம்ப் இரண்டாவது முறையாகச் சந்திக்க உள்ளார். அந்தச் சந்திப்பு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியா ஆக அண்மையில் எந்த அணுவாயுதச் சோதனையையும் நடத்தவில்லை என்று திரு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

“இப்போது அணுவாயுதச் சோதனைகள் செய்யப்படவில்லை. அதனால் நான் வடகொரியாவை அவசரப்படுத்தவில்லை. சோதனைகள் நடந்தால் அது வேறு. முடிவில் வடகொரியா தனது அணுவாயுதங்களை முழுமையாகக் களையவேண்டும்,” என்றும் அவர் கூறினார். 

அணுவாயுதக் களைவுக்குப் பிறகுதான் வடகொரியாவுடனான பொருளியல் சார்ந்த கலந்துரையாடல்கள் நிகழும் என்றார் திரு டிரம்ப்.