மகாதீர் மீது நம்பிக்கையில்லாத்  தீர்மானம் சாத்தியமில்லை

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சதிவேலைகள் நடப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அத்தீர்மானத்திற்கு   போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது  மிகவும் சிரமமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
  எனவே டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஒரு  மசோதா நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவு இருந்தால் போதும். ஆனால் ஒரு பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு  மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில்   குறைந்தது 112 எம்பிக்கள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண் டும். 
அத்துடன் அத்தகைய நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்புவோர் பல உடன்பாடுகளை முறித்துக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும் போதுமான எம்பிக்களின் ஆதரவைப் பெற  அவர் பல வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டும். இதனால் டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான  சாத்தியமில்லை என்று நிபுணரான ஷாம்ரஹாயா அஸிஸ் கூறினார்.