நஜிப்பின் முன்னாள் மெய்க்காப்பாளரை ஆஸ்திரேலியா நாடு கடத்தும்  

சிட்னி: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முன்னாள் மெய்க்காப்பாளர் சிருள் அஸ்கார் உமர் ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேண்டுகோள் சிட்னி நீதிமன்றத்தில் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவார் என்று ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை மலேசியா ரத்து செய்யும் வரை சிருளை நாடு கடத்துவதை ஆஸ்திரேலியா தாமதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மங்கோலிய அழகி அல்டன்துயா ஷாரிஃபூ மலேசியாவில் கொலை செய்யப்பட்டது தொடர்பில்  இரு மெய்க்காப்பாளர்களுக்கு 2015ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த இருவரில் ஒருவரான சிருள் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றார். 2006ஆம் ஆண்டு கோலாலம்பூர் அருகே காட்டுப் பகுதியில் மங்கோலிய அழகி அல்டன்துயாவின் தலையில் பல தடவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக சிருள் மீதும் மற்றொரு மெய்க்காப்பாளர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அப்பெண்ணின் உடலை அவர்கள் வெடிபொருட்களைக் கொண்டு சிதைத்ததாகவும் கூறப்பட்டது.