பங்ளாதேஷில் மூண்ட பெரும் தீயில் 56 பேர் பலி

பங்ளாதேஷ் தலைநகரிலுள்ள சில அடுக்குமாடிக் கட்டடங்களில் ஏற்பட்ட பெரும் தீயில் குறைந்தது 56 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டடங்கள் டாக்காவில் ரசாயனக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

மிக எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள், பிளாஸ்டிக் பரல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள கிடங்குகள் நேற்றிரவு 10.30 மணிக்குத் தீப்பிழம்பாக வெடித்தன. கட்டடச் சிதைவுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். வெடிப்பில் மேலும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று பங்ளாதே‌ஷ் தீயணைப்புத் துறையின் தலைவர் அலி அகமது தெரிவித்தார். “சடலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இன்னும் உயிரோடு இருப்பவர்களுக்கான தேடல் தொடர்கிறது,” என்று அவர் கூறினார். எரிவாயுக் கலன் ஒன்றில் தீ மூண்டு பரவியிருக்கலாம் என்றும் திரு அகமது சொன்னார். 

இருநூற்றுக்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் முயன்றபோதும் தீ முழுவதுமாக அணைக்கப்படவில்லை என்று மற்றொரு தீயணைப்பு அதிகாரி கூறினார்.