பணிப்பெண்ணைக் கொன்ற தாய்லாந்தின் முன்னைய அழகு போட்டியாளருக்கு ஆயுள் தண்டனை

தனது 16 வயது பணிப்பெண்ணைக் கொலை செய்த முன்னைய அழகு போட்டியாளர் கிரிசனா மோனா சுவான்பிதாக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரிசனா குற்றவாளி என பேங்காக் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

47 வயது கிரிசனா, அந்த இளம்பெண்ணைக் கொலை செய்தது மட்டுமின்றி, தனது தம்பி, நண்பர் ஆகியோரின் உதவியுடன் எவருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணின் சடலத்தைப் புதைக்கவும் முற்பட்டார். தனது சொற்படி அந்தப் பணிப்பெண் கேட்கவில்லை என்பதற்காக கிரிசனா ஏப்ரல் 11ஆம் தேதியன்று அந்தப் பணிப்பெண்ணைப் பலமுறை தாக்கினார். போத்தலாலும் ரப்பர் குழாயாலும் கிரிசனா பணிப்பெண்ணின் தலையிலும் தொடையிலும் பலமுறை அடித்தார். மேலும், தலைமுடியை நேராக்கும் வெப்பக்கருவியால்  பணிப்பெண்ணின் வயிற்றில் பலமுறை சூடு வைத்தார். இச்செயல்களால் கடுமையாகக் காயமடைந்த பணிப்பெண் மறுநாளே இறந்தார்.

பணிப்பெண்ணின் சடலத்தைத் திருட்டுத்தனமாகப் புதைத்த கிரிசனா, அந்தப் பணிப்பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாகப் பின்னர் தனது தாயாரிடம் பொய்யுரைத்தார். அதனை நம்பிய கிரிசனாவின் தாயார் போலிசாரிடம் புகார் கொடுத்தார். ஆயினும் பின்னர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்  தொலைபேசி வழியாக கிரிசனாவின் தாயாரிடம் நடந்த உண்மையைத் தெரிவித்ததை அடுத்து அவர் அதுபற்றி அதிகாரிகளிடம் கூறினார்.