மகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர் தற்கொலை

கனடாவில் தனது மகளைக் கடத்திக் கொன்ற இந்திய ஆடவர், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரியா என்ற அந்தச் சிறுமி, உரிய நேரத்திற்குள் தாயாரின் வீட்டுக்குத் திரும்பாததைத் தொடர்ந்து, அவளை 41 வயது ரூபேஷ் ராஜ்குமார்  கடத்தியதாக கனடிய போலிசார் கூறினர்.

டொரோன்டோவுக்கு அருகிலுள்ள பிரேம்ப்டன் நகரில் தனது மனைவியைவிட்டுப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ்குமார், துப்பாக்கிக் காயங்களால் புதன்கிழமை உயிரிழந்தார். பிப்ரவரி 14ஆம் தேதி ரியா, ராஜ்குமாரின் வீட்டில்  மாண்டு கிடந்ததை போலிசார் கண்டனர்.

11 வயது ரியா தனது பிறந்தநாளன்று ராஜ்குமாருடன் வெளியே சென்றிருந்தபோது அவளுக்கு ஏதோ ஆபத்து நேரவிருப்பதாக ராஜ்குமார் ரியாவின் தாயாரிடம் கோடிகாட்டினார். அந்தத் தாயார் உடனே போலிசாரை அழைத்துத் தனது மகளைக் காப்பாற்றும்படி மன்றாடினார். ஆனால் போலிசார் ராஜ்குமாரின் வீட்டுக்குச் செல்வதற்குள் அவர் ரியாவைக் கொலை செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தப்பியோட முயன்ற ராஜ்குமாரை போலிஸ் அதிகாரிகள் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர்.

தடுப்புக்காவலில் இருந்த ராஜ்குமார், தன்னைச் சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியை எப்படி பெற்றார் என்பது தெளிவாக இல்லை.

ரியா பலரை மகிழ்வித்து அவர்களது வாழ்க்கையில் தனது புன்னகையால் மலர்ச்சியை ஏற்படுத்தியதாக அவரது தாயார் போலிசாரிடம் கூறினார். ரியா அன்பர் தினத்திலும் தனது பிறந்தநாள் தினத்திலும் உயிரிழந்தது தங்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.