தாக்கப்பட்டதாகப் பொய்யுரைத்த கறுப்பின நடிகரைச் சாடும் டிரம்ப்

அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகர் ஜஸ்ஸி ஸ்மொலிட், தன்னை அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் தாக்கியதாகப் பொய்யுரைத்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து திரு டிரம்ப் அவரைச் சாடியுள்ளார். ஜஸ்ஸி ஸ்மொலிட் என்ற அந்த நடிகர் தனது அபாயகரமான இனவாதக் கருத்துகளால் பல மில்லியன் பேரைப் புண்படுத்தியுள்ளதாகத் திரு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

கறுப்பினத்தவர் என்பதற்காகவும் ஓரினப் பாலியல் விருப்பம் உள்ளவர் என்பதற்காகவும் இரண்டு டிரம்ப் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக 36 வயது ஸ்மொலிட் கடந்த மாதம் தெரிவித்தார். ஸ்மொலிட் தன்னை மேலும் பிரபலப்படுத்த இதனைச் செய்திருக்கிறார் என்று போலிஸ் சூப்பரின்டென்டன் எடி ஜான்சன் செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஸ்மொலிட் தற்போது நடிக்கும் ‘எம்பாயர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. போலிசாரிடம் பொய்யுரைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்மொலிட் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்லக்கூடும்.