சிரியாவில் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் தொடர்ந்து இருப்பர்

அமெரிக்க ராணுவம் சிரியாவிலிருந்து மீட்கப்பட்ட பிறகும் அங்கு சுமார் 200 ராணுவ வீரர்கள் தொடர்ந்து பணியில் அமர்த்தப்படுவர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

“சிறிய படை ஒன்று அமைதி காக்க உதவுவதற்காக சிரியாவில் சற்று காலம் தங்கியிருக்கும்,” என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சேரா சாண்டர்ஸ் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். மேல் விவரங்களை அவர் வழங்கவில்லை என்றாலும் இந்த அமைதிப்படை ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படலாம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்பினரை மீட்கப்போவதாகத் திரு டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். திரு டிரம்ப்பின் இந்த முடிவை அவரது சொந்தக் கட்சியினர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் குறைகூறி வருகின்றனர். கடந்தாண்டு டிசம்பரில் திரு டிரம்ப், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை அமெரிக்கா வென்றுவிட்டதாகவும் அறிவித்தார். ஆனால் அங்கு பல்லாயிரக்கணக்கான ஐ.எஸ் அமைப்பு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து சண்டையில் ஈடுபடுகின்றனர்.

இதற்கிடையே, திரு டிரம்ப் வியாழக்கிழமை துருக்கிய அதிபர் ரெசப் தயிப் எர்துவானிடம் சிரியாவைப் பற்றி பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. சிரியாவில் அமைதி வட்டாரம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தில் தொடர்ந்து ஒத்துழைக்க இரு அதிபர்களும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.