சகோதரியுடன் புறப்பட்ட கிம்

சோல்: வியட்னாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை இரண்டாவது முறையாகச் சந்திப்பதற்காக வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தனது சகோதரியுடன் ரயி லில் புறப்பட்டார்.
சனிக்கிழமை பிற்பகல் பியோங் யாங்கிலிருந்து திரு கிம்மின் ரயில் பயணம் தொடங்கியது.
அவருடன் வடகொரியாவின் மூத்த அதிகாரிகளும் சென்றனர் என்று அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ குறிப்பிட்டது.
ஹனோயில் இம்மாதம் 27, 28ஆம் தேதிகளில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கின்றனர்.
கடந்த முறை சிங்கப்பூரில் அவர்கள் முதல் முறையாக சந்தித் துப் பேசினர்.
அப்போது பங்கேற்ற அதே வட கொரிய அதிகாரிகளும்  இம் முறையும் ஹனோய் உச்சநிலை சந்திப்பில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவுக்கான உயர்மட்ட தலைவர் கிம் யோங் சோல், வட கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உதவி தலைவர் ரி சு யோங், வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ ஆகியோர் கிம்முடன் ஹனோய் புறப்பட்டனர் என்று வட கொரியா தெரிவித்தது.
சிங்கப்பூர் உச்சநிலை சந்திப் பில் கிம்முக்கு உதவியாக இருந்த அவரது சகோதரி கிம் யோ ஜோங்கும் பேராளர் குழுவில் இடம் பெற்றுள்ளார். வியட்னாம் அதி பரின் அழைப்பை ஏற்று வட கொரியத் தலைவர் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு வியட்னாம் வருகிறார் என்று கடந்த சனிக் கிழமை வியட்னாம் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை  தெரிவித்தது. இதையடுத்து வடகொரியத் தலைவர் கிம் வியட்னாம் புறப்பட்டு உள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணுவாயுத மற்ற வட்டாரமாக மாற்ற இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து டிரம்ப்பும் கிம்மும் 2வது முறையாக மீண்டும் ஹனோயில் சந்திக்கின்றனர். இதில் அணுவாயுதக் களைவு பற்றி பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.