சீனாவுக்கு எதிரான வர்த்தக வரி உயர்வைத் தற்காலிகமாக நிறுத்தும் அமெரிக்கா

சீனாவின் ஏற்றுமதிகளுக்கான வர்த்தக வரியை 200 பில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்த்த திட்டமிட்டிருந்த அமெரிக்கா, அத்திட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதற்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அறிவுசார் சொத்துகளின் பாதுகாப்பு, தொழில்நுட்ப இடமாற்றம், வேளாண்மை, சேவை, நாணயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நிகழ்ந்ததாகத் திரு டிரம்ப் கூறினார். இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டால் சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் உச்சநிலை சந்திப்பு நடத்தத் திட்டமிடப்போவதாக அவர் தெரிவித்தார்.

“சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வாரயிறுதி மிக நல்லதாக அமைந்தது,” என்று திரு டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்தார். 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை, திரு டிரம்ப்பின் இந்தக் கூற்றே சமாதானத்திற்கான ஆக வலுவான அறிகுறியாக உள்ளது. இந்தத் தகவல் நிதிச்சந்தைகளில் அனுகூலமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான சின்ஹுவா நிறுவனம் குறிப்பிட்டது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட குழுவினர், இரு நாட்டுத் தலைவர்களின் விருப்பங்களுக்கு உடன்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள  சம்மதித்ததாக சின்ஹுவா கூறியது.