குப்பை நிலத்தை விளையாட்டுப் பூங்காவாக மாற்றிய ஜோகூர்காரர்

பயன்படுத்தப்படாமல் வெறுமனே இருந்த நிலத்தைச் சிறார்களுக்கான விளையாட்டுப் பூங்காவாக மாற்ற முடிவுசெய்தார் 60 வயது டான் சிங் சுவீ. தூக்கி எறியப்பட்ட பொருட்களால் அவர் இந்த விளையாட்டுப் பூங்காவின் சவாரிகளை உருவாக்கினார்.

ஜோகூரின் ‘பத்து பஹாட்’ நகரில் ஜாலான் சையது அப்துல்லா சாலையிலுள்ள ‘டிஐவை பிளேகிரௌண்ட்’ இப்போது சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடமாக மாறியுள்ளது. ஊஞ்சல்கள், ‘ஃப்ளையிங் ஃபாக்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு கேளிக்கை சவாரிகளில் சிறார்கள் இங்கு விளையாடலாம்.

தனது கைவண்ணத்தால் உருவான விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகள் விளையாடுவதைக் காணும்போது அகமகிழ்வதாகத் திரு டான் தெரிவித்தார்.

“பல வருடங்களாக சுமார் 6,000 ரிங்கிட் செலவில் நான் இந்தப் பொருட்களைப் பழுதுபார்த்தேன்,” என்று திரு டான் கூறினார். “பாதுகாப்பு எனது தலையாய அக்கறை. எல்லா சவாரிகளையும் சோதனை செய்து பிள்ளைகள் காயமடையாதவாறு பார்த்துக்கொள்வேன்,” என்று அவர் தெரிவித்தார். 

“பள்ளி விடுமுறையின்போது இந்த இடம் நிரம்பியிருக்கும். இதனால் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி,” என்று திரு டான் கூறினார். 

விளையாட்டுப் பூங்காவிற்கான திட்டம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உதயமானதாக அவர் சொன்னார். ஜாலான் சையது அப்துல்லா சாலையைச் சுற்றியிருக்கும் இடத்தில் பிள்ளைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடம் எதுவும் இல்லை என்பதைக் கவனித்த அவர், குப்பைமேடுகள் நிறைந்திருந்த நிலம் ஒன்றைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார்.

இதுபோன்ற மேலும் பல விளையாட்டுப் பூங்காக்கள் ஜோகூரில் உருவாக வேண்டும் என்பது திரு டானின் விருப்பம்.