மாட்டிறைச்சி உருண்டை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சிறுவன்

மாட்டிறைச்சி உருண்டை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சிறுவன்

1 mins read

ஹாங்காங்: மாட்டிறைச்சி உருண்டை தொண்டையில் சிக்கிக்கொண்டதை அடுத்து ஹாங்காங்கில் 12 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் உயிரிழந்தான். உயர்நிலை ஒன்றில் பயிலும் அவன், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இடைவழியில் சிற்றுண்டி வாங்க விரும்பினான். அங்கிருந்து ஒரு உணவுக் கடையில் மீன், மாட்டிறைச்சி உருண்டைகளை வாங்கினான். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த அவன், மாட்டிறைச்சி உருண்டையை மென்று விழுங்கியபோது அது அவனது தொண்டையில் மாட்டிக்கொண்டது. கழுத்தைப் பிடித்தவாறு மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அச்சிறுவனைக் கண்ட பாதுகாவலர் ஒருவர், உடனே அவசர மருத்துவ வாகனத்தை அழைத்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவன், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மூளையில் போதுமான அளவு பிராணவாயு இல்லாததால் மூளை செயலிழந்து போனது. இதன் விளைவாக மற்ற உடலுறுப்புகளும் செயலிழந்தன. இச்சம்பவத்தை அடுத்து ஊடகங்களிடம் பேசிய ஹாங்காங் கல்லூரி அவசரகால மருத்துவத்துறை தலைவர் அக்சல் சியூ, நடக்கும்போதோ பேசும்போதோ சாப்பிட வேண்டாம் என்று நினைவூட்டினார். "நடக்கும்போது உணவை அவசரமாக விழுங்கினால் மூச்சுக்குழாய்க்குள் உணவு சென்றுவிடக்கூடும்," என்றார் அவர்.