‘இசிஆர்எல் ரயில் பாதை கட்டுப்படியாக இருந்தால் தொடரலாம்’

ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்புப் பாதையைக் (இசிஆர்எல்) கட்டுவதற்கான செலவு மிக அதிகம் என்றும் அது மலேசியாவுக்குக் கட்டுப்படியாக இல்லை என்றும் அந்நாட்டின் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.

மலேசியாவுக்கு இரண்டு தெரிவுகள் இருப்பதாக டாக்டர் மகாதீர் கூறினார். ரயில் திட்டத்திற்கான செலவு குறையவேண்டும் அல்லது அரசாங்கம் திட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என்று அவர் கூறினார். தற்போதைய செலவுக்கு மலேசியா 55 பில்லியன் ரிங்கிட் கடன் வாங்கவேண்டும் என்றும் அதனைத் திருப்பிக் கொடுக்க 30 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார்.

“கடனுக்கான வட்டியாலும் நாம் பாதிக்கப்படுவோம். வட்டியுடன் சேர்த்து நாங்கள் மொத்தமாக 140 பில்லியன் ரிங்கிட் திருப்பித் தரவேண்டும். ரயில் பாதையைக் கட்ட வேண்டாம் என்பது எங்களது தீர்மானம் அல்ல. ஆனால் அதனைக் கட்டுவதற்கு வேண்டிய நிதி எங்களிடம் இல்லை. 1எம்டிபி நிறுவனத்தின் கடன்களையும் நாங்கள் அடைக்க வேண்டியுள்ளது,” என்றார் டாக்டர் மகாதீர்.    

“கடன்களை மலையாய்க் குவித்திருந்த முன்னைய அரசாங்கம் இப்போது எப்படி அரசாங்கத்தை நடத்துவது என எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வந்துள்ளனர். ஆனால் அவர்களே முறையாக நாட்டை  வழிநடத்தவில்லை,” என்றார் அவர்.