சிங்கப்பூருக்குப் பிறகு வியட்னாமில் நிகழும் டிரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் புதன்கிழமை இரண்டாவது முறையாகச் சந்திக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே 70 ஆண்டுகளாக நிலவிய பகைமை இவ்விரு தலைவர்களின் பேச்சுவார்த்தைகளால் நீங்குமா என்பது இன்றைக்கான கேள்வியாக உள்ளது.

இன்று மாலை (பிப்ரவரி 27) திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்துத் தனியாகப் பேசுவர் என்று வெள்ளை மாளிகையின் பேச்சாளர் சேரா சாண்டர்ஸ் அதிபர் விமானத்தில் தெரிவித்தார். அதன் பிறகு அவர்கள் இரண்டு விருந்தாளிகளுடனும் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுடனும் இரவு உணவு உண்பர் என்றும் திருமதி சாண்டர்ஸ் கூறினார். நாளையும் அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் கூறப்பட்டது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இவ்விரு தலைவர்களும் முதன்முதலாக சிங்கப்பூரில் சந்தித்தனர். சந்திப்புக்குச் சில மாதங்களுக்கு முன்னர் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக உருட்டல், மிரட்டல்களை வீசினர். ஆனால் சந்திப்புக்குப் பின்னர் இருவருக்கும் இடையே இணக்கப்போக்கு தென்பட்டிருந்தது. அந்தச் சந்திப்புக்குப் பிறகு திரு மைக் போம்பியோ வடகொரியாவுக்குப் பலமுறை சென்று அந்நாட்டுடன் நல்லுறவை வளர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்தச் சந்திப்பிலாவது திரு கிம் அணுவாயுதக் களைவு தொடர்பான சில உறுதியான கடப்பாடுகளைத் தெரிவிப்பார் என்று அமெரிக்கத் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். சிங்கப்பூரின் முதல் சந்திப்பில் திரு கிம், அணுவாயுதத் திட்டக் களைவு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்னதாக, அணுவாயுதத் திட்டத்தைக் கட்டங்கட்டமாகக் களைவது குறித்து யோசிக்கப்படும் என்று வடகொரியா தெரிவித்தது. பதிலுக்கு, தங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அனைத்துலக வர்த்தகத் தடைகள் அகற்றப்படவேண்டும் என்று வடகொரியா கூறியது. அமெரிக்கா வர்த்தகத் தடைகளை அகற்றாவிட்டால் தனது நடவடிக்கைகள் வேறு விதமாக இருக்கும் என்று திரு கிம் புத்தாண்டின்போது மிரட்டினார்.