‘டிரம்ப் ஒரு வஞ்சகன், இனவாதி’: முன்னாள் வழக்கறிஞர் கோஹன்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை அவரது முன்னைய தனிப்பட்ட வழக்கறிஞர் மைக் கோஹன் புதன்கிழமை நிகழ்ந்த நாடாளுமன்ற விசாரணை ஒன்றில் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த அமெரிக்க பொதுத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளின்டனின் வெற்றி வாய்ப்புகளைப் பாதித்த ரகசிய மின்னஞ்சல்களின் கள்ளத்தனமான வெளியீடு பற்றி திரு டிரம்ப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்று திரு கோஹன் கூறினார்.

இருந்தபோதும், திரு டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்திற்கு வலுவூட்ட ரஷ்யாவின் உதவியை நாடியதற்கான நேரடி ஆதாரம் தன்னிடம் இல்லை என்று திரு கோஹன் தெரிவித்தார்.

“திரு டிரம்ப்பைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் ஒரு வஞ்சகன்,” என்று திரு கோஹன், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய விசாரணைக்குழு ஒன்றின் முன்னிலையில் தெரிவித்தார்.

52 வயது கோஹன், முன்பு திரு டிரம்ப்பின் மிக நெருங்கிய உதவியாளர்களில் ஒருவராக இருந்தார்.  ஆனால் கடந்தாண்டு அவர் திரு டிரம்ப்புக்கு எதிராகப் பேசத் தொடங்கினார். வரி ஏய்ப்பு, வங்கி மோசடி, தேர்தல் நிதி தொடர்பான விதிமுறை மீறல் ஆகியவற்றுக்காகக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார் திரு கோஹன்.

திரு கோஹன் ஒரு “பெருச்சாளி” என்றும் தனது தண்டனையைக் குறைப்பதற்காக இவற்றையெல்லாம் கூறுவதாகவும் திரு டிரம்ப் நேற்று வியட்னாமியத் தலைநகர் ஹனோயிலிருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு நடைபெறும் வேளையில், திரு கோஹன் மேலும் பல  தீய செயல்களைச் செய்திருப்பதாகத் திரு டிரம்ப், டுவிட்டரில் குற்றம் சாட்டினார்.