இளையர், விளையாட்டுத் துறை அமைச்சருடன் அம்னோ இளையர் தலைவர் கைகலப்பு

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அம்னோவின் இளையர் செயற்குழுத் தலைவர் வான் முகம்மது அஸ்ரி வான் டெர்பிஸ், இளையர் விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக் முகம்மதைத் தாக்கியதன்பேரில் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்று மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

மற்றொருவருக்கு வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்த முயன்றதன்பேரில் 36 வயது வான் முகம்மது அஸ்ரி மீது இன்று கஜாங் நகர நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மலேசியாவின் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் சிலர் தன்னைத் தாக்க முற்பட்டதாகத் திரு சையது சாதிக் புகார் கொடுத்ததாக கஜாங்கின் துணை போலிஸ் தலைவர் முகம்மது  சப்ரி அப்துல்லா கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

26 வயது திரு சையது சாதிக், மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் ‘பிரிபூமி பெர்சாத்து’ கட்சியின் இளையர் பிரிவுக்கான தலைவராக இருக்கிறார். செமன்யி மாநில இடைத்தேர்தல் தொடர்பில் கஜாங்கின் நகர மன்றத்துக்குச் சென்றிருந்த திரு சையது சாதிக், அங்கிருந்து வெளியே வந்தபோது தேசிய முன்னணி ஆதரவாளர்கள் சிலர் தனக்குத் தொல்லை கொடுத்ததாகத் தனது புகாரில் குறிப்பிட்டார்.  அப்போது வான் முகம்மது அஸ்ரி திடீரென அவரது கரத்தால் தனது கழுத்தைச் சுற்றிப்பிடித்து இழுத்ததாகத் திரு சையது கூறினார். அருகிலிருந்த போலிஸ் அதிகாரிகள் உரிய நேரத்தில் வந்து வான் முகம்மதைத் தடுத்ததாகவும் அவர் சொன்னார். 

சம்பவத்தைக் காட்டும் படங்களையும் காணொளிகளையும்  பதிவேற்றிய திரு சையது சாதிக், இது குறித்து மிகவும் வருத்தமடைவதாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். தனது அரசியல் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை அடிக்கடி எழுதிவரும் வான் முகம்மது, முன்னாள் துணைப்பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த குற்றத்திற்காக 2017 டிசம்பர் மாதத்தில் அவருக்கு 900,000 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டியிருந்தது.