சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களிடம் திருடியவர் கைது

இஸ்கந்தர் புத்ரி: மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்பது திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை போலிசார் செனாயில் கைது செய்தனர். கடந்த புதன்கிழமை அதிகாலை 12.25 மணியளவில் அந்த 33 வயது நபரைப் பிடித்ததாக இஸ்கந்தர் புத்ரி போலிஸ் தலைவர் ஸுல்கைரி முக்தர் கூறினார். கோத்தா திங்கியில் மெக்கானிக்காக பணிபுரிவதாகக் கூறப்பட்ட அந்த ஆடவர், ஏற்கெனவே நான்கு குற்றங்கள் புரிந்தவர் என்பது தெரியவந்திருப்பதாக திரு முக்தர் கூறினார். கைதான நபர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.50 முதல் 7.15 மணிக்கு உள்ளாக மலேசியா- சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பில் ஒன்பது திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.