பங்ளாதேஷ்: கூடுதல் அகதிகளுக்கு இடமில்லை

மியன்மாரிலிருந்து கூடுதல் அகதிகளை ஏற்க தன்னால் இயலாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு மன்றத்திடம் பங்ளாதேஷ் தெரிவித்தது.

இதுவரையில் மியன்மாரிலிருந்து வந்த கிட்டத்தட்ட 700,000 ரொஹிங்யா அகதிகளை பங்ளாதேஷ் ஏற்றுள்ளது. மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் குடியிருக்கும் ரொஹிங்யா இன மக்களுக்கு எதிராக ராணுவச் சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களில் பலர் அங்கிருந்து மற்ற பல நாடுகளுக்குத் தப்பியோடி சென்றுள்ளனர்.

மியன்மார் ராணுவத்தினர் ரொஹிங்யா மக்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட முயல்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன வர்ணித்துள்ளன. இதனை மியன்மார் மறுக்கிறது.

“மியன்மாரிலிருந்து வரும் அகதிகளை இனிமேல் ஏற்கும் நிலையில் பங்ளாதேஷ் இல்லை,” என்று பங்ளாதே‌ஷின் வெளியுறவு அமைச்சர் ஷாஹிடுல் ஹேக் தெரிவித்தார். ரொஹிங்யா மக்களைத் தாயகத்திற்கு அனுப்புவது குறித்து மியன்மாருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் மியன்மார் நேர்மையான முறையில் நடந்துகொள்ளவில்லை என்று அவர் கூறினார்.

“இதுவரை எந்த ஓர் அகதியும் ரக்கைனுக்குத் திரும்பவேண்டும் என்று சுயமாக முன்வந்து கூறியதில்லை. அங்குள்ள சூழ்நிலை சரியில்லாதது இதற்குக் காரணம்” என்று திரு ஹேக் தெரிவித்தார்.