டிரம்ப்: வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதற்கு கோஹன் விசாரணை காரணம்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான பேச்சுவார்த்தையை நடுவழியில் கைவிட தாம் எடுத்த முடிவுக்குத் தமது முன்னைய வழக்கறிஞர் மைக்கல் கோஹன் மீதான விசாரணை பங்களித்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவருக்கும் திரு கிம்முக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு இந்த விசாரணை காரணம் காட்டப்பட்டிருப்பது அமெரிக்காவின் அரசியல் கவனிப்பாளர்களை வியப்படையச் செய்திருக்கிறது.

“வடகொரியாவுடனான உச்சநிலை சந்திப்பு நடைபெறும் அதே நேரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்துள்ள ஒருவரை ஜனநாயகக் கட்சியினர் வெளிப்படையான முறையில் விசாரித்தது இதுவரை அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிராத இழுக்கு. சந்திப்பிலிருந்து (நான்) வெளியேறியதற்கு இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்,” என்று திரு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்த விசாரணையின்போது, திரு டிரம்ப் ஒரு வஞ்சகன் என்றும் இனவாதி என்றும் திரு கோஹன் கடுமையாகச் சாடினார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் திரு டிரம்ப் அதிபர் வேட்பாளராக இருந்தபோது திரு கோஹன் பிரசார விதிமுறைகளை மீறியதன் தொடர்பில் விசாரிக்கப்படுகிறார்.

கடந்த வாரம் ஹனோயில் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் இரண்டாவது முறையாகச் சந்தித்தனர். வடகொரியா தனது அணுவாயுதங்களை விட்டுக்கொடுக்கச் செய்யும் ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தேறின. 

வடகொரியா தன் மீதான வர்த்தகத் தடைகள் முழுவதையும் நீக்குமாறு கேட்டிருந்ததே பேச்சுவார்த்தைகள் நின்றுபோனதற்குக் காரணம் என்று திரு டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார். இதற்கும் திரு கோஹனுக்கும் தொடர்பு என்ன என்பது இன்னமும் தெளிவாக இல்லை.