பாகிஸ்தான் மீது பொறுமை இழந்துவரும் ஈரான், ஆப்கானிஸ்தான்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றநிலை, போர்விமானி அபிநந்தன் தாயகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு சற்றே தணிந்துள்ளது. இருந்தபோதும், பாகிஸ்தான் தனது மண்ணில் முகாமிடும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவது இந்தியா மட்டுமல்ல.பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் ஈரான், அதனைத் தானே நேரடியாகச் செய்ய தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.

ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த வெளிநாட்டு, ரகசிய நடவடிக்கை பிரிவின் தலைவர் கசெம் சொலெய்மணி, “பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் எனக்கு இந்தக் கேள்வி இருக்கிறது. உங்களது எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர். ஏதேனும் ஓர் அண்டை நாட்டை நீங்கள் விட்டுவைத்திருக்கிறீர்களா?” என்று கடிந்தார்.

“அணுவாயுதக் குண்டுகளைக் கொண்ட உங்களால், நூற்றுக்கணக்கில் இருக்கும் பயங்கரவாதப் படைகளை அழிக்க இயலவில்லையா?” என்று ஜெனரல் சொலெய்மணி கூறினார்.

பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 45 முதல் 48 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பாகிஸ்தானின் அண்டை நாடுகளில் தாக்குதலை நடத்தி வருவதாகவும் ஆப்கானிஸ்தானின் புலனாய்வுத் துறையின் முன்னைய தலைவரான ரஹ்மத்துல்லா நபில் தெரிவித்தார். “பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஓர் உத்தியாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தனது ஆகாயத் தாக்குதலை முன்னதாகவே நடத்தியிருக்கவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.