வடகொரியாவுடன் பேச்சுகளைத் தொடர விரும்பும் அமெரிக்கா

வடகொரியாவுக்குத் தூதுக் குழு ஒன்றை விரைவில் அனுப்ப விரும்புவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் கடந்த வாரம் ஹனோயில் மேற்கொண்ட சந்திப்பு எந்த இணக்கமும் இன்றி முடிந்துள்ள நிலையில் திரு போம்பியோவின் கருத்துகள் வெளிவந்துள்ளன.

“இது குறித்து எந்தக் கடப்பாடும் இப்போது எனக்கு இல்லை. இருந்தபோதும் வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் இணையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்னும் இரண்டு வாரங்களில் வடகொரியாவுக்குக் குழு ஒன்றை அனுப்ப நான் விரும்புகிறேன்,” என்று திரு போம்பியோ, ‘அயோவா ஃபார்ம் பியூரோ’ அமெரிக்க செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு தோல்வியில் முடியவில்லை என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் முன்னதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முரணான ஒப்பந்தத்தைத் திரு டிரம்ப் கையெழுத்திடமாட்டர் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான ராணுவப் பயிற்சிகளை  நிறுத்த தாம் உத்தரவிடவில்லை எனத் தெரிவித்துள்ளார். திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்ததை அடுத்து அத்தகைய ஒரு பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது. ஆயினும் அதற்கும் தமது சந்திப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திரு டிரம்ப் கூறினார்.