இந்திய நீர்மூழ்கிக் கப்பலைத் தடுத்திருப்பதாகக் கூறும் பாகிஸ்தான்

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கடற்பகுதிக்குள் நுழைவதைத் தடுத்ததாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றநிலை தொடர்ந்து நிலவும் இந்நேரத்தில் இது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 

“எங்களது கடற்பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிய கடற்படை நிறுத்தியது,” என்று பாகிஸ்தானிய கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். அமைதியைக் காப்பாற்றுவதாகக் கூறும் இந்தியாவின் சொல்லும் செயலும் முரணாக இருப்பதாக அந்தப் பேச்சாளர் கூறினார். ஆயினும், நீர்மூழ்கிக் கப்பல் குறிப்பாக எங்கு இருந்தது என்ற விவரத்தைப் பேச்சாளர் கூறவில்லை. நீர்மூழ்கிக் கப்பலின் ‘பெரிஸ்கோப்’ கருவியைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான், இந்தியாவின் கப்பல் நுழைய முயன்றதற்கு அதுவே ஆதாரம்  எனக் கூறுகிறது.

இதன் தொடர்பில் இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்தக் கருத்தும் இதுவரை வெளிவரவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் மீது வான்வழியாக மோதியதைத் தொடர்ந்து அந்த இரு நாடுகளும் அமைதி காக்கும்படி உலகச் சமூகம் கேட்டுக்கொண்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப்பகுதிகளில் ராணுவ துப்பாக்கிச்சூடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த வானூர்தி ஒன்று இரு நாட்டு எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

2016ஆம் ஆண்டில் இது போலவே, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தனது கடற்பகுதியில் இடைமறித்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது.