கஸானாவின் $2 பில்லியன் இழப்பு: நஜிப்பை சாடும் முகம்மது அஸ்மின்

மலேசிய அரசாங்க நிதியமான ‘கஸானா’வுக்கு அண்மையில் ஏற்பட்ட இழப்பின் தொடர்பில் கருத்துரைத்த முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டின் பொருளியல் விவகார அமைச்சர் முகம்மது அஸ்மின் சாடியுள்ளார். கடந்தாண்டில் கஸானாவுக்கு ஆறு பில்லியன் ரிங்கிட் (2 பில்லியன் வெள்ளி) இழப்பு ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது.

பத்தாண்டுகளாகத் தாம் பிரதமராகவும் கஸானாவின் தலைவராகவும் இருந்தபோது கஸானாவுக்கு எந்த இழப்பும் நேரிடவில்லை என்று திரு நஜிப் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 5) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். தமது பதவிக்காலத்தில் கஸானாவின் மொத்த சொத்து மதிப்பு 2008ஆம் ஆண்டின் 33.7 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2017ஆம் ஆண்டில் 82.3 பில்லியனுக்குக் கூடியது என்று தெரிவித்தார்.  

“இது சாதாரண தொகை அல்ல. அதனைக் கொண்டு 1எம்டிபியின் கடனை அடைக்கலாம் அல்லது இசிஆர்எல் ரயில் இணைப்புத் திட்டத்திற்காகச் செலவிடலாம்,” என்று திரு நஜிப் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, அமைச்சர் முகம்மது அஸ்மின் திரு நஜிப்பைப் பூடகமாகக் குறைகூறினார். “பிரச்சினை என்னவென்றால் சில அரசியல்வாதிகள், குறிப்பாகத் தோல்வி அடைந்த அமைச்சர்கள், கண்டபடி உளறிவிட்ட பிறகே தங்களது கூற்றைச் சரிபார்ப்பர். வானத்தை நோக்கி உமிழ நினைக்கும் ஒருவரின் உமிழ்நீர் அவர் முகத்தின்மீதே விழும் கதையாக இது உள்ளது,” என்று திரு அஸ்மின் டுவிட்டரில் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் கடந்தாண்டு மே பதவி ஏற்பதற்கு முன்னர் கஸானாவின் சொத்துகளையும் முதலீடுகளையும் மறுஆய்வு செய்ததில் இழப்புகள் பதிவானதாகத் திரு அஸ்மின் தெரிவித்தார். கஸானாவுக்குச் சொந்தமான மலேசிய ஏர்லைன்ஸுக்கு ஏற்பட்டுள்ள 3 பில்லியன் ரிங்கிட் இழப்பையும் அவர் சுட்டினார். புதிய அரசாங்கத்தின் பதவிக்காலத்திற்கு முன்னதாகச் செய்யப்படும் முதலீடுகள் எதுவும் பயன் அளிக்கவில்லை என்றும் அவர் குறைகூறினார்.

புதிய அரசாங்கம் கடந்தாண்டு செயல்படுத்திய திருத்தங்களுக்குப் பிறகு கஸானா இவ்வாண்டு லாபத்தை ஈட்டும் என நம்புவதாகத் திரு அஸ்மின் தெரிவித்தார்.