ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் டிரம்ப்பின் நிலை உயர்ந்தது

இவ்வாண்டின் ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் செல்வந்தர்கள் பட்டியலில் டிரம்ப்பின் நிலை உயர்ந்திருக்கிறது. திரு டிரம்ப்பின் மொத்த செல்வத்தின் மதிப்பு கடந்தாண்டைப் போல் 3.1 பில்லியன் அமெரிக்க டாலர் (4.21 பில்லியன் வெள்ளி) ஆக உள்ளது. 

உலகின் பெருஞ்செல்வந்தர்களில் 2,153 பேரைக் கொண்டுள்ள அந்தப் பட்டியலில் திரு டிரம்ப் 715ஆம் நிலையில் இருக்கிறார்.

இருந்தபோதும், அவரைவிட அந்தப் பட்டியலில் உயர்ந்த நிலையில் இருந்த செல்வந்தர்கள் பலரின் செல்வ மதிப்பு குறைந்துள்ளதால் பட்டியலில் அவரது நிலை உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் துணை நிர்வாக ஆசிரியர் லுயிசா கிரோல் தெரிவித்தார்.

பில்லியன் டாலர் பணத்தைச் சுயமாகச் சம்பாதித்த ஆக இளையவர் 21 வயது கைலி ஜென்னர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ஜென்னர் நிறுவிய ஒப்பனை நிறுவனத்தின் வெற்றி இந்தச் செல்வத்தை அவருக்கு ஈட்டித்தந்தது. 

அமேஸான் நிறுவனத்தைத் தொடங்கிய ஜெஃப் பெசோஸ், பட்டியலில் முதல் இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளார்.

பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கோடீஸ்வர செல்வந்தர்களின் எண்ணிக்கை, 2018ஆம் ஆண்டின் 2,208லிருந்து 2019ஆம் ஆண்டில் 2,153க்குக் குறைந்தது. பட்டியலிலுள்ள செல்வந்தர்களின் மொத்த மதிப்பு 2018ஆம் ஆண்டின் 9.1 ட்ரில்லியன் டாலரிலிருந்து 2019ஆம் ஆண்டில் 8.7 ட்ரில்லியன் டாலருக்குக் குறைந்தது.