மலேசியாவின் அம்னோ கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே தற்போது நிலவும் இணக்கம் குறித்து அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகம்மது தமது கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதை பாஸ் கட்சி விரும்புகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நஜிப்பைச் சுற்றியுள்ளவர்கள் தொடர்ந்து அவரை 'முதலாளி' எனக் கூவி அழைப்பதாக டாக்டர் மகாதீர் தமது வலைப்பதிவு கட்டுரை ஒன்றில் கிண்டலாகக் குறிப்பிட்டார். பண மோசடி, அதிகார முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் திரு நஜிப் நல்லவர் என பாஸ் கட்சி நினைக்கிறதா என்றும் நீதிமன்றத்தில் திரு நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் பாஸ் அவரைத் தொடர்ந்து ஆதரிக்குமா என்றும் டாக்டர் மகாதீர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த வாக்களிப்பு நடைபெற்றால் அவருக்கு ஆதரவு நல்கப்படும் என்று பாஸ் கட்சி முன்னர் உறுதி கூறியிருந்தது. அந்த உறுதி இப்போது என்ன ஆனது என்று டாக்டர் மகாதீர் வினவினார்.
ஆயினும், இந்தக் கட்சிகளின் பங்காளித்துவம் குறித்து தமது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கவலைப்படவில்லை என்று டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இந்தப் பங்காளித்துவத்தால் அவ்விரு கட்சிகளின் பொய்யும் புரட்டும் மேலும் அம்பலமாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

