இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்து சிறிசேனாவுக்கு எதிராகப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கருத்து

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், இருதரப்பிலும் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையும் அமெரிக்காவும் இணைந்து விசாரிக்க வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடைபெறவிருக்கும் 40-வது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தின் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் யாருடைய தலையீடும் இல்லாமல் எங்கள் சொந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள எங்களுக்குச் சில காலம் தேவை என்றும் ஐ.நா. கூட்டத்துக்கு எனது சார்பில் ஒரு குழுவை அனுப்புவேன் என்றும் இலங்கை அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகமும், வெளியுறவு அமைச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. தீர்மானப்படி ஒரு நீண்டகால, நிலையான சமரசத் தீர்வை அடைவதற்கான முயற்சியை இலங்கை மேற்கொள்ளும் என்றும் ஐ.நா. கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் கால அவகாசம் கேட்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிபர் சிறிசேனாவுக்கு எதிராகப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கருத்து தெரிவித்துள்ளது இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகக் காட்டுகிறது என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறியுள்ளனர்.