சிரியா சென்ற பிரிட்டிஷ் பதின்ம வயது பெண்ணின் குழந்தை மரணம்

டமாஸ்கஸ்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பிரிட்டனின் பதின்ம வயதுப் பெண்ணான ஷமிமா பேகத்தின் ஆண் குழந்தை சிரியாவில் இறந்துவிட்டதாக சிரிய ஜனநாயகப் படையின் பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
குழந்தை எவ்வாறு, எப்போது இறந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
19 வயதாகும் ஷமிமா கடந்த மாதம் சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் அந்தக் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஐஎஸ் அமைப்பில் சேர தம்முடைய 15வது வயதில் அவர் லண்டனைவிட்டு புறப்பட்டார். அவரது இரு மூத்த பிள்ளைகளும் முன்னதாக இறந்துவிட்டன.
பிறந்து மூன்று வாரங்களே ஆன கைக்குழந்தையுடன் ஷமிமா தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப கடந்த மாதம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவரது பிரிட்டிஷ் குடியுரிமை பறிக்கப்பட்டது.