கிம் ஜோங் நாம் வழக்கு: இந்தோனீசிய சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உறவினர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்ததாக நம்பப்படும் இருவரில் ஒருவர் 26 வயது இந்தோனீசிய பெண் சிட்டி ஆயிஷா. அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள மலேசிய வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சிட்டி ஆயிஷாவின் வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஏழு சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெற சிட்டி ஆயிஷாவின் வழக்கறிஞர்கள் அரசாங்கத் தரப்பிடம் முறையிட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

பல மாதங்களுக்குப் பின்னர் இன்று தொடங்கிய வழக்கு விசாரணையில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் சிட்டி ஆயிஷாவிற்கு எதிரான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அதற்குக் காரணம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

“சிட்டி ஆயிஷா விடுவிக்கப்பட்டார்,” என்று ஷா அலாம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஸ்மின் அரிஃபின் கோரிக்கையை ஏற்றவுடன் கூறினார்.

சிட்டி ஆயிஷா புறப்படலாம் என்று நீதிபதி கூறினார்.